ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்
- பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்.
- உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும்.
புதுடெல்லி:
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தது.
அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்து இருந்தது. இதை அமல்படுத்த எந்த காலக்கெடுவையும் குழு நிர்ணயிக்கவில்லை.
இதை அமல்படுத்த ஒரு செயலாக்க குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்து இருந்தது.
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மோடி யின் 3-வது ஆட்சி காலம் முடிவதற்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
2029-ம் ஆண்டு முதல் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் தனியாக பரிந்துரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.