மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனைக்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது
- முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
- பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலனை தரையில் இருந்து 17 கி.மீ. தொலைவு வரை அனுப்பி மீண்டும் அதை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து வங்கக் கடலில் இறக்கப்படும். அங்கிருந்து கலன் மீட்கப்படும்.
இதற்காக கவுண்ட்டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.
கடல் நீரில் கலன் விழுந்த உடன் இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள். ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.