இந்தியா

மும்பையில் ராட்சத விளம்பர பலகை விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Published On 2024-05-14 02:40 GMT   |   Update On 2024-05-14 02:40 GMT
  • மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் தாக்கியது.
  • இதில் ராட்சத விளம்பர பலகை விழுந்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆனது.

மும்பை:

மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் புரட்டி எடுத்தது. சுமார் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி மாலை 4 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசத் தொடங்கியது. 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் புழுதி பறந்தது. அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. காற்று, புழுதி, மழையும் சேர்ந்து தாக்கியதால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சியளித்தது.

இதற்கிடையே, மும்பை காட்கோபர், கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் கிரவுண்ட் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பதாகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்து வீடுகள் நொறுங்கின. இந்த ராட்சத பலகைக்குள் பலர் சிக்கி கொண்டனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை மீட்டனர். இதில் 70 பேர் காயமடைந்தனர். அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், ராட்சத பலகை விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News