பகத் பாசில் நடித்த `ஆவேசம்' திரைப்பட பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பல்
- பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர்.
- போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.
இதனால் இந்த படங்கள் கோடிக்க ணக்கில் வசூலை குவித்தன. இந்த படங்களின் வரிசையில் நடிகர் பகத் பாசில் நடித்த 'ஆவேசம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.
ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பகத் பாசில் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் நடித்திருந்தது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடிக்குள் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் 'ஆவேசம்' படத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சி பிரபலமாக பேசப்பட்டது.
மிகவும் பிரமாண்டமாக நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது போன்று எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சியை பார்க்கும் போதே நமக்குள் ஒருவித உற்சாகம் பிறப்பதை உணர முடியும் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'ஆவேசம்' படத்தில் இடம்பெற்றுள்ள பிறந்தநாள் பார்ட்டியை போன்று பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கும்பலை போலீஸ் படை சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலின் தலைவன் தீக்கட்டு சஜன். இவரது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி 'ஆவேசம்' படத்தில் வருவது போன்று பிறந்தநாளை மதுவிருந்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
அதன்படி திருச்சூர் அருகே உள்ள தேக்கிங்காடு மைதானத்தில் தீக்கட்டு சஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்க இருந்தது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், கூட்டாளிகள் என ஏராளமானோர் தேக்கிங்காடு மைதானத்தில் திரண்டனர். 'ஆவேசம்' பட பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருந்தது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு திரண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களை போலீசார் தப்பிச்செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.
பின்பு அவர்களில் 32 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியதால் தீக்கட்டு சஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தங்களது திட்டத்தை முறியடித்ததால் ஆத்திரமடைந்த தீக்கட்டு சஜன் திருச்சூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், கிழக்கு மற்றும் மேற்கு போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீக்கட்டு சஜன் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்தனர். தலை மறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.