திருப்பதி மலைப்பாதையில் சிறுமியை கொன்ற சிறுத்தை நிரந்தரமாக கூண்டில் அடைப்பு
- பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
- வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.
இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.
மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .
இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.
மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.