பசியால் அழுத குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற தாய்.. பகீர் வாக்குமூலம்
- தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
- காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பசியால் அழுத தனது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள பராவுயா கிராமத்தில் பிரியங்கா என்று பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளார் பிரியங்கா.
இந்நிலையில்தான் நேற்று [ஜூன் 27] வியாழக்கிழமை காலை கிராமத்தின் அருகில் உள்ள கேசம்பூர் காட் நதிக்கு குழந்தைகளை குளிக்க அழைத்துச்சென்று தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மொத்தம் உள்ள 4 குழந்தைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுவன் ஆற்றில் அருகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். மேலும் காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.
இதற்கிடையில் தாய் பிரியங்காவை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, தனது குழந்தைகள் சதா பசியால் அழுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரகள் படும் கஷ்டத்தைப் போக்கவே அவர்களை கொன்றதாக பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளார்.