லஞ்சம் வாங்கி குவித்த ஐஏஎஸ் அதிகாரி- வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பறிமுதல்
- கூட்டாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
- ஐஏஎஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக சஞ்சய் பாப்லி லஞ்சம் வாங்கியதாக ஜூன் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழிவுநீர் கால்வாய் அமைக்க டெண்டர் வழங்கியதில் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சஞ்சய் பாப்லி மீது பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அவரது கூட்டாளி சந்தீப் வாட்ஸ் என்பவரும் ஜலந்தரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சண்டிகரில் உள்ள சஞ்சய் பாப்லி வீட்டில் நேற்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்டோர் ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் உள்பட மொத்தம் 12 கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, 4 ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் மகன் துப்பாக்கிச் சூட்டில் சனிக்கிழமை உயிரிழந்தார். இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இது குறித்த விசாரணையில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி சாஹல் தெரிவித்துள்ளார்.