உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து- 5 பேர் பலி
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகம்.
- உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்குகளில் விழுந்து மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில், ஒரு விபத்து கிர்சு சௌபட்டா என்கிற பகுதியிலும், மற்றொன்று சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகேயும் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து (SDRF) பெறப்பட்ட தகவலை மேற்கோள் காட்டி, "கிர்சு சௌபட்டாவில் கார் சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், விபத்துகான காரணம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து பணியாளர்கள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் ஸ்ரீஷ்டி நேகி (15), ஆருஷி (9), சௌமியா (5) மற்றும் டிரைவர் மன்வர் சிங் என்ற சோனு என அடையாளம் காணப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஸ்ரீஷ்டியின் சகோதரி சாக்ஷி நேகி (14), சமீக்ஷா ராவத் (15) மற்றும் கன்ஹா (11) ஆகியோர் அடங்குவர்.
சாக்ஷியும், சமீக்ஷாவும் சிறப்பு சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சத்புலிக்கு சென்று கொண்டிருந்தனன் என்பது தெரியவந்தது.