இந்தியா (National)

ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய சென்னை.. திருப்பதி, நெல்லூரில் பேய் மழை- நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்

Published On 2024-10-17 04:42 GMT   |   Update On 2024-10-17 04:43 GMT
  • கனமழை காரணமாக திருப்பதி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன.
  • திருப்பதியில் 52 இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பதி:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஆந்திராவில் திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட ராயல சீமா மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த புயல் நேரடியாக சென்னையை தாக்கும் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து ஆந்திரா மாநிலத்தில் தென் மாவட்டங்களான திருப்பதி, ராயல சீமா மாவட்டங்கள் வழியாக கரையே கடக்கிறது.

சென்னை தப்பிய நிலையில் நேற்று முதல் திருப்பதி நெல்லூர் கர்னூல் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருப்பதி மாவட்டத்தில் 22 செ.மீ. மழை பதிவானது.

கனமழை காரணமாக திருப்பதி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனை உடனடியாக மீட்பு குழுவினர் அகற்றினர்.

திருப்பதி மலை முதல் கீழ் திருப்பதி வரை எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். திருப்பதி மலையில் உள்ள மால்வாடி குண்டம், கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

திருப்பதியில் 52 இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள 1183 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். திருப்பதி மாவட்டத்தில் மொத்தம் 28 நிவாரணமையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


திருப்பதியில் பெய்த கன மழை காரணமாக அங்கு வந்த ஒரு விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

நெல்லூர், கர்னூல், கடப்பா மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்தடை ஏற்பட்டது. அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த மாவட்டங்களில் உள்ள ஓடைகள் மற்றும் கால்வாய் நிறைந்து ஓடுவதால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாதாலும் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதாலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக மழையால் பாதிக்கப்பட்டனர்.

பல இடங்களில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன கடப்பா மாவட்டத்தில் 2500 ஹெக்டேருக்கு மேல் நெல்ப்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அன்னமய்யா மற்றும் கடப்பா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுகள் அறைகள் அமைத்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப் போடும் என்ற நிலையில் ஆந்திராவில் தென் மாவட்டங்களை புயல் மழை பந்தாடி உள்ளது. பல மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் மழை பெய்து வருவதால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News