இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்- சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது

Published On 2024-11-08 05:21 GMT   |   Update On 2024-11-08 05:31 GMT
  • நெய் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • குண்டூர் சரக ஐ.ஜி சர்வஸ்ரேஷ், விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி கோபிநாத் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

திருப்பதி:

ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. சிபிஐ இயக்குனரின் மேற்பார்வையில் சிறப்பு குழு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. சி.பி.ஐ.யைச் சேர்ந்த 3 அதிகாரிகள்-ஐதராபாத் இணை இயக்குநர் வீரேஷ் பிரபு மற்றும் விசாகப்பட்டினம் சரக எஸ்.பி. ரம்பா முரளி மற்றும் 2 மாநில அதிகாரிகள், குண்டூர் சரக ஐ.ஜி சர்வஸ்ரேஷ் திரிபாதி மற்றும் விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி கோபிநாத் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பு கூடம் மற்றும் ஏ.ஆர்.டெய்ரி உணவுப் பொருட்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.

லட்டு தயாரிப்பதற்கான நெய் டெண்டர் செயல்முறை, நெய் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News