திருப்பதி லட்டு சர்ச்சை....சிறப்பு புலனாய்வு குழு விசாரணை-சந்திரபாபு நாயுடு
- ஆந்திர மாநிலத்தில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்.
- மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் இந்து மத நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். திருப்பதியில் நடந்த கலப்பட நெய் முறைகேடு அராஜகம் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க ஆந்திர மாநில ஐ.ஜி. மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவினர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளிக்கிறேன்.
மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு கோவிலிலும் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்வோம்.
அனைத்து கோவில்கள், மசூதிகள் தேவாலயங்களில் மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். எந்த மதத்தின் ஆலயமும் அந்தந்த மதத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் திருப்பதி கோவிலில் பிற மதத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான குழு ஒரு சூதாட்டம் போல தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் நடந்துள்ளது.
ஆட்சி மன்றங்களில் குற்றவாளிகள் சமூக விரோதி சக்திகள் இல்லை என்பதை உறுதி செய்வோம். தேவைப்பட்டால் கடுமையான சட்டம் கொண்டு வருவோம்.
திருப்பதி கோவில் வளர்ச்சி குறித்து மத்திய மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்தோம். கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு பக்தருக்கும் இனி எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி அளிக்கிறேன். திருப்பதி லட்டுகள் தயாரிப்பில் கடந்த ஆட்சியில் செய்த தவறுக்காக தவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.