கிலோ ரூ.100-ஐ தாண்டியதால் விபரீதம்- தக்காளி வியாபாரியை 250 கி.மீ. விரட்டி சென்று ரூ.5 லட்சம் வழிப்பறி
- காரில் சென்ற கும்பல் சோமண்டே பள்ளி என்ற இடத்தில் வேனின் முன்பாக காரை நிறுத்தினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. அப்போது தக்காளி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குறி வைத்து கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டனர்.
தோட்டங்களில் புகுந்து விவசாயிகளை தாக்கி நள்ளிரவு நேரங்களில் தக்காளி பழங்களை பறித்து சென்ற சம்பவங்களும் நடந்தன.
அதே நிலை தற்போது ஆந்திராவில் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கொள்ளை கும்பல் தக்காளி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குறிவைத்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகலிலை சேர்ந்தவர் நயாஸ்.
தக்காளி வியாபாரியான இவர் தனது வேனில் தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு ஐதராபாத் சென்றார். ஐதராபாத் மார்க்கெட்டில் தக்காளியை விற்றுவிட்டு மீண்டும் முல்பாகல் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் வேனை நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் டீ குடித்தார். அங்கிருந்த கும்பல் ஒன்று நயாஸ் தக்காளி விற்றுவிட்டு வருவதால் அவரிடம் ஏராளமான பணம் இருக்கலாம் என எண்ணினர்.
டீ குடித்து முடித்த பின்னர் நயாஸ் வேனை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்போது டீக்கடையில் இருந்த கும்பல் தங்களது காரில் நயாஸ் வேனை பின் தொடர்ந்து சென்றனர். நயாஸ் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். கும்பல் அவரை 250 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்றனர். காரில் சென்ற கும்பல் சோமண்டே பள்ளி என்ற இடத்தில் வேனின் முன்பாக காரை நிறுத்தினர்.
காரில் இருந்து இறங்கிய கும்பல் நயாசை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் மீண்டும் தப்பிச் சென்றனர். இது குறித்து நயாஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
தக்காளி வியாபாரியை குறிவைத்து கும்பல் கொள்ளையடித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தக்காளி வியாபாரிகள் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.