உடுப்பியில் நக்சலைட்டின் முக்கிய தலைவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
- 5 பேர் கொண்ட நக்சலைட் குழு உணவு பொருட்கள் வாங்க வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்.
- துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர்.
இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.