இந்தியா

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published On 2023-08-23 05:20 GMT   |   Update On 2023-08-23 06:24 GMT
  • வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம்.
  • அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மூணாறு:

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது.

ஆண்டுதோறும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் இந்த 2 அணைகளையும் சுற்றுலா பயணிகள் பாா்வையிட அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட்டு செல்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதில் வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அணையை பார்வையிட நுழைவுக் கட்டணமாக முதியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. அணையின் உள்ளே சுற்றுலா பயணிகள் செல்போன், கேமரா ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். வாரத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட முடியாது. வயது முதிர்ந்தோர் அணையை சுற்றி பார்க்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News