'கூகுள் மேப்' பயன்படுத்தி சென்ற சுற்றுலா கார் கால்வாய்க்குள் பாய்ந்தது
- ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர்.
- உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர்.
திருவனந்தபுரம்:
இன்றைய விஞ்ஞான உலகில் சுற்றுலா செல்பவர்கள் பலரும் மனித வழிகாட்டிகளை நம்புவதை விட, கூகுள் மேப்பை பயன்படுத்தியே பல இடங்களுக்கும் செல்கின்றனர். இது பல நேரங்களில் சரியாக இருந்தாலும், சில நேரங்களில் ஆபத்தில் கொண்டு விட்டு விடுகிறது.
அதுவும் மழைக்காலங்களில் கூகுள் மேப் வழிகாட்டி மூலம் சென்ற வாகனங்கள் விபத்துக்களை அதிகம் சந்தித்துள்ளன. கேரளாவில் கடந்த ஆண்டு கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற கார், ஆற்றுக்குள் பாய்ந்ததில் 2 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் இது போன்ற மற்றுமொரு சம்பவம் கேரளாவில் இன்று நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை ஆலப்புழா பகுதியில் கூகுள்மேப் வழிகாட்டியை பார்த்து சென்றுள்ளனர். அவர்கள் 2 சாலைகள் பிரியும் இடத்தில் சென்ற போது, மேப் காட்டிய வழியில் காரை செலுத்தி உள்ளனர். ஆனால் அந்த வழி கால்வாய்க்கான வழியாகும். இது தெரியாமல் சென்றதால், கார் கால்வாய்க்குள் பாய்ந்து மூழ்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஒருவர் தப்பினார். அவர் உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.