இந்தியா

வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் செல்போன் எண் கேட்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு

Published On 2023-05-24 03:39 GMT   |   Update On 2023-05-24 03:39 GMT
  • இதில் அந்தரங்கம் பற்றிய கவலையும் அடங்கி இருக்கிறது.
  • தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால், பில் போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

புதுடெல்லி :

வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் எண்களைத் தருமாறு சில்லரை வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும், அவ்வாறு தர மறுத்தால் அவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.

இந்தியாவில் சில்லரை வியாபாரி பில் போடுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களைத் தரவேண்டியது கட்டாயம் இல்லை. வியாபார பரிமாற்றங்களை செய்து முடிப்பதற்கு வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கணை சில்லரை வியாபாரிகள் கேட்டு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துவதாகவும், பெரும்பாலான நேரங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு கூடவிடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் புகார்களைப் பரிசீலித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், இது தொடர்பாக சில்லரை வியாபாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது பற்றி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால், பில் போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாயம் இல்லாத, கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை. இப்படி தகவல்களை சேகரிப்பது சரி இல்லை.

இதில் அந்தரங்கம் பற்றிய கவலையும் அடங்கி இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் நலனைப் பேணுகிற வகையில் சில்லரை வியாபாரத்துறைக்கும், இந்திய தொழில் சம்மேளனத்துக்கும், இந்திய வர்த்தக தொழில் சம்மேளனத்துக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களைத் தரவேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் வற்புறுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News