இந்தியா

பயணிகள் ரெயிலில் எலி கடித்ததில் பெண் டாக்டர் காயம்

Published On 2024-05-29 06:47 GMT   |   Update On 2024-05-29 06:47 GMT
  • டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
  • ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இயக்கப்படும் பல ரெயில்களில் விஷ பூச்சிக்கள் பயணிகளை கடிப்பதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பெண் பயணி ஒருவரை பாம்பு கடித்ததாக தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் பாதிக்கப்பட்ட பெண், ஆயுர்வேத டாக்டர் ஆவார். கேரள மாநிலம் நீலம்பூரைச் சேர்ந்த காயத்ரி (வயது 25) என்ற அந்த டாக்டர், நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார்.

அந்த ரெயில வல்லப்புழா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கைக்கு அடியில் காலில் ஏதோ கடிப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் கீழே குனிந்து பார்த்தபோது, அங்கு எதுவும் இல்லை. ஆனால் காலில் பல்லால் கடித்த காயம் காணப்பட்டது.

பாம்பு கடித்தது போன்ற காயம் இருந்ததால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையில் ரெயில், வல்லப்புழா நிலையத்தை வந்தடைந்தது. அங்கு டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, உடலில் விஷம் ஏறவில்லை என தெரிய வந்தது.

எனவே அவரை கடித்தது பாம்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடித்தது எது என்பது தெரியவில்லை. இதற்கிடையில் ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.

வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டு பெட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெட்டியில் எலி இருப்பது தெரியவந்தது. எனவே அது தான் டாக்டர் காயத்ரியை கடித்திருக்கலாம் என தெரிகிறது.

Tags:    

Similar News