இந்தியா

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே?

Published On 2022-07-04 02:48 GMT   |   Update On 2022-07-04 02:48 GMT
  • சபாநாயகர் தேர்தலில் ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.
  • மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்த பலம் 287 ஆகும்.

மும்பை :

மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார்.

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால், கடந்த 1½ ஆண்டுகளாக காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர்.

தேர்தலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணிக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு போட்டியாக சிவசேனா அதிருப்தி அணியும் கட்சியினருக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு மகாராஷ்டிரா சட்டசபை முதல் முறையாக நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரயிஸ்சேக், அபு ஆஸ்மி, எம்.ஐ.எம். கட்சியின் ஷா பரூக், முப்தி முகமது, பா.ஜனதாவின் லட்சுமண் ஜக்தாப், முக்தா திலக், ஜெயிலில் உள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த தத்தாரே பாரனே, அன்னா பன்சோதே, நிலேஷ் லங்கே, பாபன்தாதா ஷிண்டே, காங்கிரசை சேர்ந்த பிரனிதி ஷிண்டே, ஜிதேஷ் அன்தாபுர்கர் என சுமார் 13 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து நடந்த சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் பொறுப்பு சபாநாயகராக இருந்து புதிய சபாநாயகர் தேர்தலை நடத்தினார். முடிவில் சபாநாயகர் தேர்தலில் 271 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜனதாவின் ராகுல் நர்வேக்கர் 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்விக்கு 107 ஓட்டுக்களே கிடைத்தன.

மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்த பலம் 288 ஆகும். ஒரு உறுப்பினர் இறந்துவிட்டதால் தற்போதைய பலம் 287. மெஜாரிட்டிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சிவசேனா அதிருப்தி- பா.ஜனதா கூட்டணி அரசு மெஜாரிட்டிக்கு கூடுதலாக 20 ஓட்டுகள் பெற்று சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற 45 வயது ராகுல் நர்வேக்கருக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறினார்.

அப்போது அவர், 'நாட்டின் இளம் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர்' என பெருமிதத்துடன் தெரிவித்தார். இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் உள்ள சிவசேனா சட்டமன்ற கட்சி அலுவலகம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் சீல் வைக்கப்பட்டது. அலுவலக வாசலில், 'சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் உத்தரவின் பேரில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.' என எழுதப்பட்ட வாசகம் தொங்கவிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. சபாநாயகர் தேர்தலில் பெற்றிபெற்றதால் நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதை தடுக்க மும்பையில் உள்ள ஓட்டலுக்கு மீண்டும் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News