"அவர்கள் எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தனர், ஆனால்...": இஸ்ரேல் தூதர்
- இத்தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிகிறது
- தற்போதைய தொழில்நுட்பத்தில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடுகின்றன
பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் (Hamas) அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ள இஸ்ரேலிய ராணுவ படை (IDF) பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட ஒரு ராக்கெட் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெர்ரஸ் (Antonio Guterres) உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என கூறி அதற்கு ஆதாரமாக பல வீடியோ காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இஸ்ரேலுக்கான தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இது குறித்து தெரிவித்ததாவது:
அல் அஹ்லி மருத்துவமனை மீது பாலஸ்தீன ஐ.ஜே (Palestinian Islamic Jihad) அமைப்பினர் ராக்கெட் ஏவி நடத்திய தாக்குதல் இது. அவர்கள் எங்கள் நாட்டினை குறி வைத்தனர்; ஆனால் எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தவர்கள் தங்கள் நாட்டு குழந்தைகளை கொன்று விட்டனர். உலகில் இன்னும் சிலர் அவர்களை ஆதரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். இந்த ராக்கெட் தாக்குதல் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மக்களை கேடயமாக பயன்படுத்தி சுரங்கங்களில் ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர் துணிச்சலுடன் வெளியே வந்து எங்களுடன் போரிட வேண்டும்.
இவ்வாறு நவோர் கிலன் தெரிவித்தார்.