இந்தியா

சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு

பயந்ததுபோலவே நடந்துவிட்டது... முன்பே பாதுகாப்பு கேட்ட உதய்பூர் டெய்லர்

Published On 2022-06-29 13:46 GMT   |   Update On 2022-06-29 13:46 GMT
  • நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து பதிவிட்டதற்காக கன்னையா லால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  • கொலை மிரட்டல் வந்ததால் இரு பிரிவு சமூகங்களின் தலைவர்களையும் போலீசார் அழைத்துப் பிரச்சினையை தீர்க்க முயன்றனர்.

உதய்பூர்:

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லால், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கன்னையா லால், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசிடம் பாதுகாப்பு கோரியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக ஜூன் 11ஆம் தேதி, கன்னையா லால் போலீசால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், ஒரு நாள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. கொலை மிரட்டல் குறித்து போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, "எனது மகன் என்னுடைய மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளப் பதிவை தவறுதலாக அனுப்பிவிட்டான். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, 2 பேர் என்னிடம் வந்து எனது மொபைல் போனை பறிக்க முயன்றனர். மூன்று நாட்களாக, அந்த 2 பேர் எனது கடையின் அருகே பதுங்கியிருந்து, கடையை திறக்க விடாமல் தடுத்தனர். தயவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது கடையை திறக்க உதவுங்கள், என்னை பாதுகாக்கவும்." இவ்வாறு அவர் போலீஸ் புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தையல்காரரையும், அவரை மிரட்டியதாக குற்றம் சாட்டிய அக்கம்பக்கத்தினரையும், மேலும், இரு பிரிவு சமூகங்களின் தலைவர்களையும் அழைத்துப் பிரச்சினையை தீர்க்க முயன்றனர்.

அவரது மனைவி கூறுகையில் "பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இனி போலீஸ் நடவடிக்கை தேவையில்லை' என்றும் என்று கணவர் எழுத்துப்பூர்வமாக அளித்தார். ஆனால் அவர் இன்னும் பயந்தார். ஒரு வாரமாக அவர் கடைக்கு செல்லவில்லை. நேற்று முதல் முறையாக சென்றார்" என்றார்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஹவா சிங் குமாரியா கூறுகையில், "அனைத்து தரப்பினர் மற்றும் சமூகத் தலைவர்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. அவரை தாக்கியவர்கள், அவரை அச்சுறுத்தியவர்கள் அல்ல. வேறு நபர்கள்" என்று கூறினார்.

கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரால் கன்னைகொல்லப்பட்டார். அதன்பின்னர், இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News