நாக்பூரின் களங்கம் என்றார் உத்தவ் தாக்கரே: மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என்கிறார் பட்னாவிஸ்- கடும் வார்த்தை போர்
- உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் தான் மகாராஷ்டிரத்தின் களங்கம்.
மும்பை:
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் நாக்பூரில் கட்சியினர் இடையே பேசினார். அப்போது அவர், தேசியவாத காங்கிரசுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறிய பழைய வீடியோ பற்றி பேசினார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரின் களங்கம் எனவும் கூறினார்.
உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். உத்தவ் தாக்கரே கொடும்பாவியை எரித்தனர்.
மேலும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் உத்தவ் தாக்கரேயை கண்டித்தனர். நாக்பூரில் பா.ஜனதாவினர் உத்தவ் தாக்கரேக்கு இறுதி சடங்கு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர் கூறுகையில், "பா.ஜனதாவை முதுகில் குத்திய உத்தவ் தாக்கரே தான் இந்துத்வாவுக்கு ஏற்பட்ட களங்கம். அவர் எங்கள் தலைவர் பற்றி அதுபோன்ற கருத்துகளை கூற கூடாது" என்றார்.
மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறும்போது, "உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் பற்றி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு தைரியம் இருந்தால் மீண்டும் நாக்பூர் வரவேண்டும். மக்கள் அவரை செருப்பால் அடிப்பார்கள்" என்றார்.
இதேபோல பா.ஜனதாவின் முகநூல் பக்கத்திலும் அந்த கட்சி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து உள்ளது. அதில், "உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் தான் மகாராஷ்டிரத்தின் களங்கம். உங்களுக்கு மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே பேச்சு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
தற்போதைய அரசியல் சூழலால் எனது முன்னாள் நண்பர் (உத்தவ் தாக்கரே) பாதிக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. அவர் மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். அவருடைய தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு அவரது பேச்சுக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன். அவரது தற்போதைய மனநிலை அந்த அளவுக்கு உள்ளது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் கூறியதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.