விலகும் மாணவர்களின் முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: யுஜிசி உத்தரவு
- மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
- அக்டோபர் 30ம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையை ரத்து செய்த பிறகும் அல்லது கல்லூரியில் இருந்து விலகிய பிறகும் உயர் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, இதுதொடர்பாக யுஜிசி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.