இந்தியா

"மரண தண்டனை வழங்குங்கள்": உஜ்ஜைன் பாலியல் குற்றவாளியின் தந்தை

Published On 2023-09-30 11:37 GMT   |   Update On 2023-09-30 11:37 GMT
  • சிறுமி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
  • குற்றவாளி சார்பில் வாதாட வேண்டாம் என பார் கவுன்சில் வேண்டுகோள் வைத்துள்ளது

சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை பரிதாபமாக தட்டியும் அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அந்நகர மக்கள் அவளுக்கு உதவ மறுப்பதும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியாக, அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

"நூற்றுக்கணக்கான பேரை விசாரணை செய்து, 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பரத் சோனி எனும் ஆட்டோ ஓட்டுனர் இந்த குற்றத்தை செய்திருப்பதை கண்டு பிடித்தோம். சுமார் 35 அதிகாரிகள் இந்த சைபர் விசாரணையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தூக்கம் இல்லாமல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. குற்றவாளியை நெருங்கும் போது அவன் தப்பி ஓட முயன்றான். காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அச்சிறுமிக்கு உதவ மறுத்தவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தனது மகனின் இந்த குற்றச்செயல் குறித்து, "என் மகன் தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு வெட்கக்கேடான செயல். அவனை காணவோ, அவனை காப்பாற்றவோ நான் காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல போவதில்லை" என பரத் சோனியின் தந்தை ராஜு சோனி கூறினார்.

"கோவில் நகரமான உஜ்ஜைன் நகரின் பெயரையே இச்சம்பவம் நாசப்படுத்தி விட்டது. நீதிமன்ற பார் கவுன்சிலை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் குற்றவாளி சார்பாக வாதாட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்," என உஜ்ஜைன் பார் கவுன்சில் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News