பொதுத் தேர்வு குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்- மாணவர்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
- மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி அவர்களை உற்சாகப்படுத்த மத்திய கல்வித்துறை ஏற்பாடு.
- கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நடத்தி வருகிறது.
தேர்வு பயம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்கி தேர்வு நடைமுறையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள்,ஆன்லைன் மூலம் நடத்தப்படும் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://innovateindia.mygov.in/ppc-2023/ என்ற இணைய தளம் மூலம் வரும் 30ந் தேதிவரை பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமருடனான தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் அதிக அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளுமாறு மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.