(கோப்பு படம்)
மானிய விலையில் உரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது- மத்திய மந்திரி
- ஐந்து மாநில விவசாயிகளுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்.
- உழவர் பாதுகாப்பு மையங்கள், விவசாயிகளுக்கு உதவி வருகின்றன.
பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மந்திரி மாண்டவியா பேசியதாவது:
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழவர் பாதுகாப்பு மையங்கள் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகள் தங்களது வருமானத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்ளும் வகையில் அவை உதவுகின்றன.
உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உலகளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவிய போதிலும், மத்திய அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.