விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்- 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்
- கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
- இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது.
உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்டில் வெளியாகின. இதில் நன்கு படிக்கும் மாணவர்களை விட அதிகமாக 4 பேருக்கு 50 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை மதிப்பெண் கிடைத்துள்ளது.
இதில் சந்தேகம் எழுந்ததால் அந்த 4 மாணவர்களின் விடைத்தாள்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்கி பார்க்கப்பட்டது. இதில் 4 மாணவர்களுமே விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வாசகங்களை எழுதி பக்கங்களை நிரப்பியிருந்தனர். இன்னொரு மாணவர், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திவ்யான்ஷூ சிங் புகார் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
இதில் இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினய்வர்மா, ஆஷிஷ்குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் பல மாணவர்களை தேர்வில் காப்பியடிக்க அனுமதித்ததாக புகார்கள் வெளியாகின.