சட்டசபை வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு: ஏன் தெரியுமா?
- உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் நாளை தொடங்குகிறது.
- சட்டசபை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது.
டேராடூன்:
உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரின் போது, குறிப்பிட்ட பகுதியில் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் என டேராடூன் மாவட்ட நீதிபதி சோனிகா தெரிவித்தார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதால், இந்த சட்டசபை கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நேற்று முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அதில் பொது சிவில் சட்ட வரைவு அறிக்கை குறித்து விவாதித்தார். இதில் வரைவு அறிக்கை அமைச்சரவை ஒப்புதலை பெற்றது. அதன்பிறகு அரசு நாளை மறுநாள் (6-ம் தேதி) சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை சமர்ப்பிக்க உள்ளது.
முன்னதாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பொது சிவில் சட்ட வரைவு குழு வரைவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமியிடம் சமர்ப்பித்தது.
இதுதொடர்பாக, முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி கூறுகையில், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மக்களுக்கு உறுதியளித்தோம். பொது சிவில் சட்ட வெளியீடு பா.ஜ.க.வால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மாநிலமக்களுக்கு இது ஒரு முக்கியமான நாள் என தெரிவித்தார்.