வைகுண்ட ஏகாதசி: தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதி
- 9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. இதற்காக ஏற்கனவே ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு 4 லட்சம் இலவச தரிசன டோக்கன் வழங்க விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்களில் இன்று மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக நாளை முதல் திருப்பதியில் நேரடி இலவச தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக மலை அடிவாரத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களின் ஆதார் அட்டை மற்றும் தரிசன டோக்கன்களை சரி பார்த்து மலைக்கு அனுப்பி வைப்பார்கள்.
9 மையங்களிலும் தரிசன டோக்கன் தீரும் வரை பக்கர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.
அந்த டோக்கனில் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதனால் பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக திருப்பதிக்கு வருவார்கள் .
டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி உள்ளதால் கீழ் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
டோக்கன் வழங்கப்படும் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.
இன்று வழக்கம் போல நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நாளை முதல் டோக்கன் இல்லாத பக்தர்கள் அனுமதிக்க படமாட்டார்கள். நேரடி இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். அந்த இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை பெறலாம்.
பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்சில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உள்ளன.
நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.