இந்தியா

ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது... வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published On 2022-09-12 10:18 GMT   |   Update On 2022-09-12 10:18 GMT
  • கள ஆய்வின்போது, மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
  • ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என வாதம்

வாரணாசி:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் வீடியோ ஆய்வு பணிகளை நடத்தியது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாமா? என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரித்து முடிவு செய்யலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து. எனவே, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு,' என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது,' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஸ்லிம் அமைப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்துவதற்காக இந்து மத பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறிய நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தகுதியின் அடிப்படையில் வாதங்கள் நடைபெறும் என நீதிபதி கூறினார்.

இந்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய தரப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. தீர்ப்பையொட்டி வாரணாசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News