பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய விமானம்-ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.
ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.
மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.
ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.
இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.