தர்பூசணி ஜூஸ் சேர்த்து தயாரித்த சிக்கன் பிரியாணி- வீடியோ வைரல்
- வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
- வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.