இந்தியா

இடிந்து விழுந்த சுவர் 

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 பேர் உயிரிழப்பு

Published On 2022-09-16 08:07 GMT   |   Update On 2022-09-16 09:37 GMT
  • ராணுவ வளாக சுவர் இடிந்து, குடிசை பகுதி மீது விழுந்தது.
  • உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

லக்னோ:

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லக்னோ அருகே உள்ள தில்குஷா பகுதியில் ராணுவ வளாகத்திற்க வெளியே ஏராமானோர் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.

நேற்றிரவு கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார்.

அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோல் உன்னாவ் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்து சம்பங்களில் ஒரே நாளில் 12 பேர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News