முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மீண்டும் மனு
- முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
- பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கேரள அரசு மீண்டும் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக திகழ்வது முல்லை பெரியாறு அணை.
இந்த அணையில் 154 அடி வரை தண்ணீரை தேக்கலாம். இதற்கு கேரள அரசு ஒப்புக்கொள்வதில்லை. இதனால் முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது.
இதில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கேரள அரசும் மனு செய்துள்ளது. அந்த மனுவில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது. மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முல்லை பெரியாறு அணை பகுதியில் 138 சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
எனவே நீரியல், கட்டுமானம், புவியியல் நில நடுக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கேரள அரசு மீண்டும் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.