ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பா.ஜனதாவில் இணைந்தார்
- தன்னை போன்ற நிர்வாகியே, ராகுல் காந்தியை அணுக முடியாத நிலையில், சாதாரண மக்கள் எப்படி அவரை அணுக முடியும்.
- கேரள அரசியலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக நடக்கிறது. அங்கு வருகிற 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக வயநாடு மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சுதாகரன், திடீரென காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியை மையமாக கொண்ட அரசியல் பார்வையில் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, இந்த சகாப்தத்திற்கு மிகவும் பொருத்தமான கட்சியாக இருப்பதால், பாரதிய ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போன்ற நிர்வாகியே, ராகுல் காந்தியை அணுக முடியாத நிலையில், சாதாரண மக்கள் எப்படி அவரை அணுக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான கருணாகரனின் மகள் பத்மஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது மாவட்ட செயலாளரும் பா.ஜனதாவில் இணைந்திருப்பது கேரள அரசியலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.