வயநாடு நிலச்சரிவு பலி 413 ஆக உயர்வு- பள்ளத்தாக்கு பகுதியில் சிறப்பு குழு இன்றும் தேடுதல்
- சிறப்பு குழுவினர் இன்று காலை பள்ளத்தாக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று 10-வது நாளை எட்டியிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டியதால் கடந்த 30-ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தது.
அட்டமலை, புஞ்சிரி மட்டம், வெள்ளரி மலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவு மற்றும் காட்டாற்றுவெள்ளம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்த பயங்கர சம்பவத்தில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள், மருத்துவ குழுவினர் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து ஈடுபட்டார்கள்.
இந்த தேடுதல் பணி நேற்று 9-வது நாளாக நீடித்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மேலும் மாயமாகியிருக்கும் நூற்றுக்கும் அதிகமானவர்களை தேடும் பணி தொடர்ந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள், வனத்துறையினர், மீட்பு குழுவினர் என 12 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தேடினார்கள். அதில் மேலும் சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதனால் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்தது.
பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் பல உடல்கள் கிடக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கு 3-வது நாளாக தேடுதல் பணி இன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு குழுவினர் இன்று காலை பள்ளத்தாக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் கடந்த 2 நாட்களாக தேடிய இடங்களை தவிர, பிற பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். அவர்கள் இன்று மோப்ப நாய்களையும் அழைத்துச் சென்று வனப்பகுதியில் தேடினர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று 10-வது நாளை எட்டியிருக்கிறது.
சிறப்பு குழுவினர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்பு குழுக்களை சேர்ந்த மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள், சாலியாறு மற்றும் வனப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் பட்டியலை கேரள அரசு நேற்று வெளியிட்டது.
அதில் 138பேர் இடம்பெற்றிருந்தனர். காணாமல் போயிருப்பவர்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களது பெயர், முகவரி மற்றும் புகைப்படம் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.