இந்தியா

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த காதலியை கரம் பிடிக்க காத்திருந்த வாலிபர் விபத்தில் பலி

Published On 2024-09-12 08:41 GMT   |   Update On 2024-09-12 08:41 GMT
  • திருமணத்திற்காக இருவரும் காத்திருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ருதியின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது.
  • உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்த ஸ்ருதிக்கு அவரது காதலன் ஆதரவாக இருந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன என்பது பல நாட்கள் தேடுதல் வேட்டை நடத்திய பிறகும் கண்டறியப்படவில்லை.

வயநாடு நிலச்சரிவில் பலர் குடும்பத்தோடு உயிரிழந்துவிட்டனர். பலர் தங்களின் உறவுகளை இழந்து தனியாகிவிட்டனர். சூரல்மலை பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்ற இளம்பெண், நிலச்சரிவில் தனது தாய் சபீதா, தந்தை சிவண்ணன், சகோதரி ஸ்ரேயா உள்ளிட்ட குடும்பத்தினர் 9பேரை இழந்துவிட்டார்.

பணி நிமித்தமாக கோழிக்கோட்டில் இருந்ததால் ஸ்ருதி நிலச்சரிவில் சிக்காமல் தப்பித்தார். தாய்-தந்தை மற்றும் சகோதரி மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஸ்ருதி அனாதையானார். நிவாரண முகாமில் தங்கியிருந்த அவருக்கு, அவருடைய காதலனான ஜென்சன் ஆதரவாக இருந்தார்.

நிலச்சரிவில் ஸ்ருதியின் வீடு முற்றிலுமாக இடிந்து விட்டது. அவர்களது வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகியது. ஸ்ருதியின் திருமணத்துக்காக அவரது பெற்றோர் வைத்திருந்த 4 லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 பவுன் நகைகள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்த ஸ்ருதிக்கு அவரது காதலன் ஆதரவாக இருந்தார். முகாமில் தங்கியிருந்த ஸ்ருதியுடன் தினமும் காலை முதல் மாலை வரை ஜென்சன் உடன் இருந்தபடி இருந்தார். நிவாரண முகாமில் காதலர்கள் இருவரும் கைகளை கோர்த்தபடி நடந்து சென்றதை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு பிரபலமாகினர்.

இவர்களுக்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு சில நாட்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம நடைபெற்றது. திருமணத்திற்காக இருவரும் காத்திருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ருதியின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது. உறவுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்த ஸ்ருதியை திருமணம் செய்வதில் ஜென்சன் மிகவும் உறுதியாக இருந்தார்.

"ஸ்ருதியை கைவிட மாட்டேன், அவளை விரைவில் திருமணம் செய்து கொள்வேன், நான் இருக்கும் வரை அவளுக்காக வாழ்வேன்" என்று ஜென்சன் கூறினார். இந்த நிலையில் நிவாரண முகாமில் இருந்து முண்டேரியில் வாடகை வீட்டிற்கு ஸ்ருதி குடியேறினார்.

நிலச்சரிவில் சிக்கி பலியான அவர்களது குடும்பத்தினரின் உடல்கள் பிரேத பரிசோதனை உள்ளிட்ட விஷயங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நடந்தது. அவை அனைத்தும் முடிந்ததும் இந்த மாத இறுதியில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்தநிலையில் ஸ்ருதி மற்றும் அவரது தோழிகள் சிலருடன் ஜென்சன் வேனில் சுற்றுலா தலத்துக்கு சென்றார். வேனை ஜென்சன் ஓட்டிச் சென்றிருக்கிறார். வெள்ளரம்குன் என்ற பகுதியில் சென்ற போது அவர்களது வேனின் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது.

இந்த விபத்தில் காதலர்கள் சென்ற வேனின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது. முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஜென்சன் மற்றும் ஸ்ருதி படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் கடும் போராட்டத்திற்கு பிறகு வேனின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

ஜென்சன் மேப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஸ்ருதி கல்பெட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஜென்சன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ஸ்ருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜென்சனும், ஸ்ருதியும் 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தான், வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர். இதனால் உடைந்துபோன ஸ்ருதிக்கு ஆதரவாக இருந்த ஜென்சன், காதலியை கரம் பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

அதன் மூலம் ஸ்ருதிக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது காதலன் விபத்தில் பலியானதன் மூலம் விதி ஸ்ருதியின் வாழ்க்கையில் மீண்டும் விளையாடி விட்டது. காதலன் ஜென்சன் விபத்தில் பலியானது பற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ருதிக்கு தெரிவிக்கப்படவில்லை.

காதலன் தனக்கு எப்போதும் துணையாக இருப்பான் என்ற எண்ணத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் ஸ்ருதி. 

Tags:    

Similar News