இந்தியா

வயநாட்டில் மீண்டும் தீவிர தேடுதல் பணி

Published On 2024-08-11 04:27 GMT   |   Update On 2024-08-11 04:27 GMT
  • பொதுமக்கள் தரப்பில் சுமார் 200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்
  • அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம்:

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை கண்டுபிடிக்க கடந்த மாதம் 30-ந்தேதி முதல் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் குழு என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ராடர்கள் மற்றும் ட்ரோன்கள், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள், நிபுணத்துவம் பெற்ற மோப்பநாய்கள் உள்ளிட்டவைகளும் தேடு தலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் பலியாகிய நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் முப்படை வீரர்களும் 10 நாட்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது தேடுதல் பணியை கடந்த 9-ந்தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதேநேரத்தில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டியிருப்பதால் மற்ற பிரவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.


காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் புதிய முயற்சியாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. தேடுதலுக்கான அனைத்து வழிகளும் தீர்ந்துவிட்டதால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் கடைசி முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் நேற்றுமுன்தினம்(9-ந்தேதி) தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் வீடுகள் புதைந்த இடங்கள், சாலியாற்று பகுதிகள், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வனப்பகுதிகள் என பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

பொதுமக்கள் தரப்பில் சுமார் 200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். இந்த தேடுதலின் பலனாக மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த முறையை பயன்படுத்தி தேடுதல் பணியை தொடர மீடட்பு குழுவினர் முடிவு செய்தனர்.

அதே நேரத்தில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்று வயநாடு வந்ததால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவர் வந்து சென்றபிறகு சில இடங்களில் மீட்பு குழுவினர் மட்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் பொது மக்கள் பங்களிப்புடனான மெகா தேடுதல் பணி இன்று மீண்டும் நடைபெற்றது. தேடுதல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 9 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதன் பிறகு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.

நேற்று முன்தினத்தை விட பொதுமக்கள் தரப்பில் இன்று கூடுதலான நபர்கள் தேடுதல் பணியில் களமிறங்கினர். முண்டக்கை, சூரல்மலை, புஞ்சிரிமட்டம், கிராம அலுவலக வளாகம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் இன்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி இன்று 13-வது நாளை எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News