இந்தியா

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Published On 2024-09-19 14:06 GMT   |   Update On 2024-09-19 14:06 GMT
  • திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டிறைச்ச கொழுப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.
  • திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, "கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுப தொடர்பாக பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி சுப்பா ரெட்டி, "திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.

அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருப்பதி கோயில் பிரசாதம் லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கால்நடை தீவனம் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான NDDB CALF திருப்பதி லட்டை ஆய்வு செய்தது. ஆய்வு அறிக்கையில், "திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News