பணிச்சுமையால் உயிரிழந்த ஊழியர்.. தாயார் எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைரல்
- அன்னாவின், தகுதிக்கு மீறிய பல்வேறு பணிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் (26) என்பவர் எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வேளைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் அறையில் உயிரிழந்து கிடந்தார். இவரின் உயிரிழப்பு, கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா எர்ன்ஸ்ட் & யங் இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "அன்னாவிற்கு இதுதான் முதல் வேலை. உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அவர் மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், 4 மாதங்களிலேயே அதிக பணிச் சுமையால் அவர் உயிரிழந்துள்ளார். இரவு நீண்டநேரமும், வார இறுதி நாள்களிலும் அவர் வேலை செய்துள்ளார். பெரும்பாலான நாட்கள் மிகவும் சோர்ந்து போய் விடுதிக்கு திரும்பியுள்ளார்.
புதிதாக வேலைக்கு சேர்ந்தவருக்கு முதுகெலும்பு உடையும் அளவுக்கான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரியில், அன்னா முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவார். CA தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். உங்கள் நிறுவனம் கொடுத்த அனைத்துப் பணிகளையும் அவர் சோர்வின்றிச் செய்தார்.
ஆனாலும் பணிச்சுமை அவரை உடல் மற்றும் மனரீதியாக பாதித்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பல ஊழியர்கள், பணிச்சுமை தாங்காமல் ராஜினாமா செய்துள்ளனர். அன்னாவின் மேலாளர் தொடர்ந்து பணி நேரம் முடிந்தபிறகு அவருக்கு வேலை வழங்கியுள்ளார். கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
இரவு நேரம் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிய வைத்துள்ளனர். அன்னாவின், தகுதிக்கு மீறிய பல்வேறு பணிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேனேஜருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை. எனது மகளின் உயிரிழப்பு, அந்த நிறுவனத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் அடைந்த துயரமும், அதிர்ச்சியும் வேறு குடும்பத்தால் தாங்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
அன்னாவின் தாயார் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி பலரும் அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், இதனை வழக்காக எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அன்னாவின் தாயார் எழுதிய கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அன்னா செபாஸ்டியனின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மேலும் அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.