எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து ஒவைசி கட்சி செய்தி தொடர்பாளர் சொல்வது என்ன?
- பா.ஜனதாவுடன் கைக்கோர்த்த தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளனர்
- காங்கிரசை கடும் விமர்சனம் செய்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு
கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டாலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. கர்நாடகாவில் உள்ள குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு அழைப்பு இல்லை.
அழைக்கப்படாதது குறித்து ஒவைசி கட்சியின் செய்தி தொடரபாளர் வரிஸ் பதான் கூறுகையில் ''அவர்கள் எங்களை அழைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் அரசியல் திண்டத்தகாதவர்கள். நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி உள்ளிட்ட அங்கிருக்கும் தலைவர்கள் பா.ஜனதாவுடன் ஏற்கனவே கைக்கோர்த்தவர்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டசபை தேர்தலின்போது காங்கிரசை கடும் விமர்சனம் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து இருப்பதை நாம் பார்த்தோம். நாங்கள் 2024-ல் மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஆனால், ஒவைசி மற்றும் எங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.