முதலீட்டாளர்கள் பணம் இழந்தால் அதற்கு யார் பொறுப்பு? மோடியா... அதானியா- ராகுல் காந்தி
- அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
- SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?
முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா.., SEBI தலைவரா.. அல்லது அதானியா?
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது" என்று பேசியுள்ளார்.