பீகாரில் 40 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவோம் - பிரசாந்த் கிஷோர்
- பீகாரில் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
- முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பார்க்கிறது.
தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர், 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெல்வதுதான் எங்கள் ஜன சுராஜ் கட்சியின் நோக்கம். 243 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். அதில் குறைந்தபட்சம் 40 பெண் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 முஸ்லிம் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்துவோம். மாநிலத்தின் மக்கள்தொகையில் 18-19% முஸ்லிம்கள் இருந்தாலும் பீகார் சட்டமன்றத்தில் 19 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர்.
பீகாரில் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பார்க்கிறது. நான் அக்கட்சிக்கு சவால் விடுகிறேன், பீகாரின் முஸ்லிம் மக்கள்தொகைக்கு ஏற்ப முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அப்படியென்றால் குறைந்தது 40 சட்டசபை தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
ராஷ்டிரிய ஜனதா எங்கெல்லாம் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் இந்து வேட்பாளர்களை நிறுத்துவோம். ஆகவே முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப அக்கட்சி சீட்டு வழங்கவேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டியே. கடந்த மக்களவை தேர்தலில் 243 தொகுதிகளில் 176 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு இங்கு இடமில்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் பீகார் முதல்வராக பதவி ஏற்பார்.
நான் 2014 இல் நரேந்திர மோடியை ஆதரித்தேன். 2015 முதல் 2021 வரை பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஆதரித்தேன். இந்தியாவில் 80% இந்துக்கள் இருந்தும் பாஜகவிற்கு கடந்த மக்களவை தேர்தலில் 37% ஓட்டு தான் விழுந்தது. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக 40% இந்துக்கள் வாக்களித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.