டெல்லி அவசர சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் - மத்திய அரசை வலியுறுத்திய சந்திரசேகர ராவ்
- டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
- மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
ஐதராபாத்:
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை இன்று சந்தித்தனர். அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரசேகர் கூறியதாவது:
இந்த அவசரச் சட்டத்தை நீங்களே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் கெஜ்ரிவாலை ஆதரிப்போம் என பிரதமரிடம் கோருகிறோம். அவருக்கு துணை நிற்போம்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவசரச் சட்டத்தை முறியடிப்போம். தேவையின்றி பிரச்சனை செய்யாதீர்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு நீதி வழங்க, கேசிஆர் கட்சி மற்றும் அவரது அரசு எங்களுடன் உள்ளது. இது டெல்லி மட்டுமல்ல, தேசத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. கே.சி.ஆர் ஆதரவு எங்களுக்கு பலத்தை அளித்துள்ளது என கூறினார்.