பெண் பயணியை ஏமாற்ற முயன்ற ஓட்டுனர்.. நள்ளிரவில் விரைந்து வந்த போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன?
- அவசர உதவி எண் மூலம் போலீசார் வேகமாக பதிலளித்து 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
- பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்தால் நாம் எதைத்தான் நம்பி பயணிப்பது... எவ்வளவு முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல இரவு 10.30 மணிக்கு பெண் ஒருவர் ஓலாவில் காரை புக் செய்துவிட்டு காத்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஒருவர் அவரை அணுகி காரில் ஏறுமாறு தெரிவித்துள்ளார். அவரும் காரில் ஏறிய பிறகு டிரைவர் ஓடிபி-யை கேட்கவில்லை. மேலும் அந்த நபர் ஓலா ஆப்பை பயன்படுத்தவில்லை என்பதை அறிந்தார்.
இதனிடையே தனது ஆப்ஸ் வேலை செய்யவில்லை என்றும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான லோகேஷனை தருமாறு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷனை ஷேர் செய்த பெண்ணிடம் கூடுதலாக பணம் கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் தன்னை வேறு ஒரு காரில் ஏற்றிவிடமாறும் இல்லையென்றால் விமான நிலைய பிக்அப் ஸ்டாண்டில் திரும்ப விடும் படி கேட்டுள்ளார். இருப்பினும் அப்பெண் சொல்வதை கேட்க மறுத்த டிரைவர், காரை பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எடுத்து சென்று நிறுத்தி ரூ.500 தரும்படி கேட்டுள்ளார்.
செய்வதறியாது தவித்த அப்பெண் அமைதியாக இருந்துள்ளார். பிறகு தேசிய அவசரகால உதவி எண்ணான 112-ஐ அழைத்துள்ளார். மேலும் விவரங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். அவசர உதவி எண் மூலம் போலீசார் வேகமாக பதிலளித்து 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதன் பிறகு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற கார் ஓட்டுனர் பசவராஜ் என்று அடையாளம் காணப்பட்டது. அதன்பிறகு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட, இதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் ''இது மிகவும் பயமாக இருக்கிறது, உங்கள் புகார் கடிதத்தைப் படிக்கும் போது எனக்கு மயக்கமே வருகிறது'' என்றார்.
மற்றொருவர், ''ஓம் நீங்கள் இப்போது நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் இது நடந்தது. நான் வண்டியில் ஏறியதை ஆப்ஸில் காட்டாததால் வெளியே வந்தேன் என்று கூறினார்.
இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.