இந்தியா

பைக் டாக்சி ஓட்டும் பெண்கள் பாலியல் தொல்லையால் அவதி

Published On 2023-12-19 05:52 GMT   |   Update On 2023-12-19 05:52 GMT
  • கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
  • சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செல்போனில் அழைத்த சில நிமிடங்களில் பைக் டாக்சி வந்து நிற்கிறது. அதிலும் டிரைவர்களாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பிரபல பைக் டாக்சி நிறுவனத்தின் கீழ் பெண்கள் பலர் பைக் ஓட்ட தொடங்கியுள்ளனர்.

இதன் மூலம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.

மேலும் திருமணமான பெண்கள் கணவரின் மது பழக்கத்தால் குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவும் பைக் டாக்ஸி ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

பைக் டாக்சி தொழிலில் குடும்பத்தை நடத்த தேவையான வருமானம் கிடைக்கிறது. எங்கள் நிறுவனம் ஒதுக்க கூடிய வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்றி சென்று விடுகிறோம்.

இதில் சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை தருகிறார்கள். வேலையை சுற்றியுள்ள ரகசியம் காரணமாக இது போன்ற சம்பவங்களை போலீசில் புகார் அளிப்பது சவாலாக உள்ளது.

இது போன்ற நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.

மேலும் பல பெண்கள் பைக்டாக்சி ஓட்ட தயாராக இருந்தாலும் இது போன்ற இக்கட்ட சூழ்நிலையால் அவர்கள் இந்த தொழிலுக்கு வர பயப்படுகின்றனர்.

பெண்கள் ஒட்டும் பைக் டாக்ஸியில் செல்வதன் மூலம் பாதுகாப்பான சூழலை உணர முடியும் என்பதால் தற்போது பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News