பாதுகாப்பான இரத்தம் "மிக மிக அவசரம்".. இன்று சர்வதேச இரத்த தான தினம்
- இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்.
- இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவது.
உலகம் முழுக்க இன்று சர்வதேச இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்தம் சேமிக்கப்படுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கட்டணமின்றி தங்களின் குருதியை தானம் செய்து பலரின் உயிரை காக்கும் பரிசை வழங்குவோருக்கு பாராட்டு தெரிவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.
வலிமையான சுகாதார கட்டமைப்பில் போதுமான அளவுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்படும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை சேமித்து வைப்பதே இரத்த சேவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரத்த தான நாளுக்கான கருப்பொருள் மாறிக் கொண்டே இருக்கும்.
கருப்பொருள் எதுவாயினும், மக்களிடம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆகும். இந்த ஆண்டு இரத்த தானம் நாளின் 20 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
சர்வதேச இரத்த தான நாளில் கடந்த ஆண்டுகளில் உலகளவில் இரத்தம் தானம் செய்து வருவோருக்கு நன்றி தெரிவிக்கவும், மருத்துவர்கள் மற்றும் தானம் வழங்குவோரை பெருமைப்படுத்தவும் உலக சுகாதார மையம் திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இரத்தம் தானம் செய்வதில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு, வரும் காலங்களில் இரத்த தானம் செய்வதை மேலும் துரிதப்படுத்தவும் உலக சுகாதார மையம் உறுதியேற்கிறது.