இந்தியா

விருது சுமையாக கூடாது.. நீங்களே எடுத்துக்கோங்க.. பிரதமருக்கு மல்யுத்த வீராங்கனை கடிதம்

Published On 2023-12-26 16:19 GMT   |   Update On 2023-12-26 16:19 GMT
  • வீராங்கனைகள் நீண்ட கால போராட்டம் நடத்தி வந்தனர்.
  • மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்து பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அந்த பதவியில் இருந்து விலகியவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட கால போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்து வருகின்றனர்.

 


அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இது தொடர்பான கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தான் வென்ற பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

மல்யுத்த வீரர்களின் இந்த அறிவிப்புகளை தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. எனினும், இது தொடர்பாக தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் சஞ்சய் சிங் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டாரா அல்லது மற்றவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா என்பது எனக்கு தெரியாது என சாக்ஷி மாலிக் தெரிவித்து இருந்தார். 

Tags:    

Similar News