தாயையும் மகளையும் சரிக்கட்ட பணம் கொடுத்த எடியூரப்பா.. போக்சோ வழக்கில் சி.ஐ.டி பரபரப்பு அறிக்கை
- எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணும் அவரது தாயும் தங்களுக்கு நேர்ந்தது குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா மற்றும் அவரது சகாக்கள் 3 பேர் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று சிஐடி அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், எடியூரப்பாவின் சகாக்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு வைத்து பெண்ணின் தாய் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவை நீக்க வறுபுறுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பாவின் கட்டளைப்படி அவர்களுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.