இந்தியா

கைதான மகன் செபின் கிறிஸ்டியன் - செபாஸ்டியன்

ஆலப்புழாவில் கொடூரம்: படுத்த படுக்கையாக இருந்த தந்தையை வாக்கரால் அடித்துக்கொன்ற வாலிபர்

Published On 2023-11-25 04:26 GMT   |   Update On 2023-11-25 04:26 GMT
  • செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
  • செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்பிரா பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன்(வயது65). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு நடக்க முடியாமல் போனது. ஆகவே அவர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.

அவரை அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தார். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை அவரது குழந்தைகள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் காயமடைந்துவிட்டதாக கூறி, ஆஸ்பத்திரியில் செபாஸ்டியன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் செபாஸ்டியன் அடித்துக்கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தவறி விழுந்ததில் காயமடைந்து இறக்கவில்லை என்றும், அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் இறந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை கவனித்து வந்த அவரது மூத்த மகன் செபின் கிறிஸ்டியன்(26) உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

ஆகவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது தந்தையை வாக்கரால் அடித்தும், காலை வைத்து கழுத்தில் மிதித்தும் கொன்ற தகவலை செபின் கிறிஸ்டியன் தெரிவித்தார். தாய் இறந்தபிறகு தந்தை செபாஸ்டியனை, மூத்த மகன் என்ற அடிப்படையில் செபின் கிறிஸ்டியனே அதிகமாக பார்த்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று செபாஸ்டியன் படுக்கையிலேயே மலம் கழித்துவிட்டார். இது மகன் செபின் கிறிஸ்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தந்தை பயன்படுத்தும் வாக்கரை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார். வலியால் துடித்த அவர் படுக்கையில் இருந்து கீழே உருண்டு விழுந்திருக்கிறார்.

அதன்பிறகும் தந்தையை வாக்கரால் தொடர்ந்து தாக்கியபடி இருந்துள்ளார். மகனின் இந்த தாக்குதலால் நிலைகுலைந்த செபாஸ்டியன் வலியால் அலறி துடித்திருக்கிறார். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத செபின் கிறிஸ்டியன், தனது காலால் தந்தையின் கழுத்தில் வைத்து மிதித்துள்ளார்.

அதில் படுகாயமடைந்ததாலேயே செபாஸ்டியன் இறந்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

மகன் செபின் கிறிஸ்டியனை கைது செய்தனர். பின்பு அவர், ஆலப்புழா முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை மகனே கொடூரமாக கொன்ற சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News