கோவில் திருவிழாவுக்கு கொண்டு வந்த பட்டாசுகள் வெடித்து சிதறின: வாலிபர் பலி
- கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
- விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே புதிய காவு கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் திருப்போனித்துரா அருகே சூரக்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 28) என்பவர் ஓட்டினார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு காலி வீட்டில் பட்டாசுகளை சிலர் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளுக்கும் தீ பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. அருகில் உள்ள வீடுகள் அதிர்ந்ததோடு, ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விஷ்ணு உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது. சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. 20 வீடுகள் சேதமடைந்தன. பட்டாசு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திருப்போனித்துரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.